கந்தர் அலங்காரம்

0 comments
Kartikeya

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே.

திருவண்ணாமலைக் கோயிலின் கோபுர வாயிலிக்கு வடக்குப் பக்கம் வீற்றிருக்கும் விநாயகனை வழிபட வருபவர்கள் ‘தட பட’ என்ற ஒலியுடன் தங்கள் தலையில் குட்டிக்கொண்டு அவர்கள் கொண்டு வந்த சர்க்கரை முதலிய பொருட்களை ஏற்றுக் கொள்ளும் விநாயகனின் இளையவனாகிய முருகப் பெருமானை நான் தரிசனம் கண்டேன்.

page breakMuruga

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே.

முக்தியை அடைவதற்கான தவத்தினை ஒரு சிறிது போலும் செய்யாத என்னை இந்தப் பிரபஞ்சம் என்னும் சேற்றிலிருந்து விடுபட வழி காட்டிய முருகப் பெருமானே ! தனது செஞ்சடையில் கங்கையையும், பாம்பினையும், கொன்றை மலரையும், தும்பை மலரையும், சந்திரனையும் சூடிக்கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய நீயே கருணை வடிவான கிருபாகரனும் ஆவாய்.

page break

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.

நாம் செய்த பாவங்களை அழித்து மீண்டும் பிறவி எடுக்காமல் இருப்பதற்கும் முக்தியைத் தர வல்லதுமான கூர்மையான வேலினை ஏந்திய முருகப் பெருமானின் புகழினைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழை ஏதுமின்றி கற்காமல் இருக்கின்றீர்களே ! தன்னுடைய தீக்கண்களிலிருந்து புகை எழுந்து யமன் நம்மை நோக்கி வீசும் பாசக் கயிறு நம் கழுத்தில் சுருக்கு விழுந்து நம் உயிரைப் பறிக்கும் நாளிலா முருகனின் புகழைக் கூறும் பாடல்களைக் கற்க இயலும்?

page break

தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல்
கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்
பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே.

தேரிலே சென்று திரிபுரங்களையும் எரித்த சிவபெருமானின் குமாரனாகிய முருகப் பெருமானின் சிவந்த கையிலுள்ள கூர்மையான வேலால் கிரௌஞ்ச மலை பொடிப்பொடியானது. முதலில் நேராக அணி வகுத்து வந்த சூரபத்மனின் அரக்கர் சேனை பின்னர் வட்ட வடிவில் வளைந்து ஓடி அழிபட்டது. தேவலோகம் அரக்கர்களிடமிருந்து மீண்டது.

page break

ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலர் இட்டு உனது தாள்
சேர ஒட்டார் ஐவர் செய்வது என் யான் சென்று தேவர் உய்யச்
சோர நிட்டூரனை சூரனை கார் உடல் சோரி கக்கக்
கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே

என் ஐம்புலன்களையும் என்னால் அடக்க முடியாமையால் உனது திருவடிகளின் பெருமையை உணர முடியவில்லை.. பரம்பொருளான உனது திருவடிகளை நினைக்க விடாமல் அவை என்னைத் தடுக்கிறது. மலர்களால் பூஜை செய்து உன் திருவடிகளை வணங்க முடியவில்லை. நான் என்ன செய்வது? தேவர்களைக் காப்பற்ற சூரபத்மனை அவனது கரிய உடலில் இருந்து இரத்தம் வெளிவர உன் கூரிய வேலால் ஒரு இமைப் பொழுதில் அழித்தவனே

page break

திருந்தப்  புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி அழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே

.
அழகான இந்த உலகங்களை ஈன்ற பொன்னிறமான பார்வதி தேவியின்
ஞானப் பாலை அருந்திய பின்னர், சரவணப் பொய்கையில் உள்ள தாமரை
மலர்களில் தவழ்ந்து கார்த்திகைப் பெண்களின் பாலையும் உண்ண விரும்பி கடல் அழவும், மலைகள் அழவும், சூரபத்மன் அழவும், தானும் விம்மிவிம்மி அழுத அந்த இளங் குழந்தையை இந்த உலகம் குறிஞ்சிக் கிழவன் என்று வாழ்த்தும்

page break

பெரும் பைம் புனத்தினுள் சிறு ஏனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்லமெல்ல உள்ள
அரும்பும் தனி பரம ஆனந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே

.

பசுமையான பெரிய தினைப் புனத்தினுள் சிறிய தினைத் தோட்டத்தைக் காக்கின்ற வள்ளியை விரும்புகின்ற முருகவேளை நாம் உண்மையான அன்பினால் மெல்லமெல்ல நினைக்கும் போது நமக்குள் எழுகின்ற பரமானந்தத்தை அறிந்தது முதல் எனக்கு கரும்பும் கசந்தது. செந்தேனும் புளித்து மிகவும் கசந்தது

page break

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் பிரமத்தைத் தவிர்ப்பாய் அவுணர் உரத்து உதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே

மூட காரியங்களைச் செய்து அதனால் துன்பங்களை அடைந்து தவிக்கின்ற என் உள்ளத்தில் குடி கொண்டுள்ள மயக்கத்தைப் போக்குவாயாக. அரக்கர்களின் உடலில் இருந்து வருகின்ற இரத்தத்தில் பேய்கள் குளித்து அதனைக் குடித்து கூத்தாடுமாறு செய்த வேலினை உடைய காவலனே

page break

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல்
அளியில் விளைந்தது ஓர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத்
தெளிய விளம்பியவா! முகம் ஆறுடைத் தேசிகனே

உயர்ந்த ஞானத்தைப் போன்ற கைலாய மலை உச்சியில் உதித்த ஜோதி வடிவமாக சிவபெருமானின் கருணையில் உருவான ஆனந்தத் தேனே ! ஆதியிலே உருவான அந்தப் பரம்பொருளை நான் தெளிவாக அறியும்படி எனக்கு உபதேசித்த ஆறுமுகப் பெருமானே

page break

தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ
வான் அன்று கால் அன்று தீ அன்று  நீர் அன்று  மண்ணும் அன்று
தான் அன்று நான் அன்று அசரீரி அன்று சரீரி அன்றே

.
தேனைப் போலவும் சுவை மிக்கப் பாகினைப் போலவும் ஒப்பில்லாத இனிய வாக்குகளை உடைய தெய்வமாகிய வள்ளியின் கணவனான முருகப் பெருமான் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு. அது பரம்பொருள் ஆகும். அதைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது ஆகாயம் அல்ல. காற்று அல்ல. தீ அல்ல. நீர் அல்ல. மண்ணும் அல்ல. நீ அல்ல. நானும் அல்ல. அது உருவம் இல்லாதது அல்ல. உருவம் உடையதும் அல்ல.

page break

சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா இகல் வேலன் நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லவனே

சொல்வதற்கு இனியும் ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு அனைத்தையும் மறந்து பரம் பொருளை அடைய என்னை வழிகாட்டியவரே. நல்ல இனிய வாக்குகளை உடைய கோவைப் பழத்தைப் போன்ற செவ்விதழ்களை உடைய வள்ளியை மணந்த மலையைப் போல் வளர்ந்த தோள்களை உடைய முருகப் பெருமானே

page break

குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியில் எண்
திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டது

.
கடிவாளத்தினை விடாமல் பிடித்தபடி வெற்றிகளை அடையும் வேலவன், அரக்கர்களின் குடல் கலங்க, சவுக்கால் அடிபட்ட குதிரையின் வேகத்தை விட அதி வேகமாகச் செல்லுகின்ற மயிலின் மேல் அமர்ந்து செல்லும் போது, தோகைகளில் இருந்து வரும் காற்றானது மேரு மலையில் வீசிய போது அந்த மலையே அசைந்தது. முருகப் பெருமானின் மயில் மெல்ல அசைந்து நடந்த போது அதன் கால் பட்டு அந்த மலை தூள் பட்டது. அந்த மலையின் துகள்கள் வீழ்ந்ததால் கடலும் மேடாயிற்று.

page break

படைபட்ட வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக்கொள்ளச் சலதி கிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுபடலம்
இடைப்பட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே

.
படையுடன் வந்த வேலவனிடம் சரண் அடைந்த சேவல் முருகப் பெருமானின் கொடியில் இடம் பெற்று, அது சிறகினை அடித்த போது கடல் கிழி பட்டது. அண்ட சராசரங்களும் இடிந்து உடைந்தன. நக்ஷத்ரங்கள் அதிர்ந்தன. மலைகளும் மேரு மலையும் தூள் பட்டன.

page break

ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிண்கிணி ஓசைபடத் திடுக்கிட்டு அரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டு வெற்பும் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயம் கெட்டதே

சிவபெருமானைத் தன் உடலில் ஒரு பாகத்தில் உடைய பார்வதி தேவியின் குமாரனாகிய முருக வேளின் இடையில் மணிகளின் ஓசையைக் கேட்டு அரக்கர்கள் அஞ்சி நடுங்கினர். எட்டு திசையில் உள்ளவர்கள் செவிடாயினர்.மேருமலை அதிர்ந்தது. தேவர்களின் பயமும் நீங்கியது.

page break

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இருநான்கு வெற்பும்
அப்பாதியாய் விழ மேரும் குலுங்க விண்ணாரும் உய்யச்
சப்பாணிகொட்டியகை ஆறுஇரண்டு உடைச் சண்முகனே

நிலையற்ற இந்த மானிட வாழ்க்கையில் களித்துக் கூத்தாடி ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த முடியாமல் சுழன்று கொண்டிருந்த என்னைப் பாசத்துடன் நேர்வழியில் செலுத்தி முக்தி அடையச் செய்வாய். தனது பன்னிரு கரங்களைக் கொட்டி எட்டு மலைகளும் மேரு மலையும் சரி பாதியாகப் பிளந்து தேவர்களை அரக்கர்களிடமிருந்து விடுதலை பெறச் செய்த முருகப் பெருமானே

page break

தாவடி ஓட்டு மயிலும் தேவர் தலையிலும் என்
பா அடி ஏட்டிலும் பட்டது அன்றோ படி மாவலிபால்
மூ அடி கேட்டு அன்று மூதுஅண்டம் கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே

மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்டு அதைத் தனது திருவடிகளால் அகில உலகங்களையும் அளந்த திருமாலின் மருமகனாகிய முருகப் பெருமானின் சிறிய திருவடியோ, மயில் வாகனத்தின் மீதும் தேவர்கள் தலையின் மீதும் நான் பாடிய பாடல்கள் எழுதப்பட்ட ஏட்டின் மீதும் பட்டது?

page break

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே

மனத்தைக் கட்டுப்படுத்தி கோபத்தை விட்டு தானங்கள் செய்து அசையாமல் இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால், கொடும் கோபத்துடன் வந்த சூரபத்மனிடம் இருந்து ஏழு உலகங்களையும் காப்பற்ற மேரு மலையையும் பிளந்து அரக்கனும் அழிய தனது வேலைச் செலுத்திய ,முருகப் பெருமானின் திருவருள் தானாகவே நம்மை வந்து அடையும்page break
வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே.

வேதங்களும் ஆகமங்களும் துதிக்கின்ற முருகப்பெருமானின், வெட்சி மலர்களால் ஆன தண்டை அணிந்த திருவடிகளைக் காவலாகக் கொண்டு, வேறு யாராலும் அடைய முடியாத, இரவு பகல் இல்லாத, சூது இல்லாத பரம் பொருளை அடைந்து சும்மா இருக்கும் நிலையை இனியாவது எனது மனம் அடைவதாக

page break

வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே

சூரியனைப் போல் ஒளி வீசுகின்ற அழகிய வேல் ஏந்திய முருகப் பெருமானை வணங்கி வறியவர்களுக்கு தங்கள் உணவில் ஒரு சிறிய அளவினையாவது பங்கிட்டு கொடுக்கவேண்டும். உங்களுக்கு இங்கு வெய்யிலுக்கு ஒதுங்குவதற்கு போலும் உதவாத இந்த உடலின் நிழலைப் போல், நீங்கள் இறக்கும் போது சேர்த்து வைத்திருக்கும் உங்கள் செல்வம் உங்கள் கூட வராது என்பதை உணர வேண்டும்

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 512

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 1000

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 633

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 559

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 514

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN