பரதன் செய்த பலவகைச் சபதங்கள்

0 comments
bharata

தசரதன் இறந்த பிறகு வசிட்டன் பரதனை அயோத்திக்கு வரச்சொல்லி தூதர்களை அனுப்பினார். அயோத்தியை வந்து அடைந்த பரதன் மக்கள் வருத்ததுடனும் நகரம் பொலிவிழந்தும் இருந்ததைக் கண்டான்.தந்தையை எங்கும் காணாததால் கைகேயி இருக்கும் இடத்தை அடைந்தான். தந்தை எங்கே என்று கேட்ட பரதனிடம் கைகேயி “தேவர் கைதொழ மன்னவர் வானகம் எய்தினார். நீ வருந்தாதே” என்றாள்.

ஆனவன் உரை செய வழியில் சிந்தையாள்
தானவர் வலி தப நிமிர்ந்த தானையத்
தேனமர் தெரியலான் தேவர் கை தொழ
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள்

கைகேயி இவ்விதம் கல் நெஞ்சத்துடன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட பரதன் கடும் துயரத்தை அடைந்தான். கண்களில் கண்ணீர் வழியத் தன் தாயிடம் “நெருப்பினை எடுத்துக் காதினில் வைப்பது போன்ற இந்தச் சொற்களை உன்னை அல்லாமல் வேறொருவர் மனதிலும் நினைப்பரோ” என்றான்.

வாயொளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆயலர் நயனங்கள் அருவி சோர்தரத்
தீயெரி செவியில் வைத்தனைய தீய சொல்
நீயலது உரை செய நினைப்பரோ என்றாள்

பின்னர் அங்கு நிற்கப் பிடிக்காமல் பரதன் கோசலை இருக்குமிடத்தை அடைந்தான். பரதன் குற்றமற்றவன் என்று அறிந்திருந்தும் கோசலை அவனிடம் கைகேயி செய்த வஞ்சனை உனக்குத் தெரியாது போலும் என்றாள்.

மையறு மனத்தொரு மாசு உளான் அலன்
செய்யனே என்பது தேறும் சிந்தையாள்
கைகேயர் கோன்மகள் இழைத்த கைதவம்
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள்

அதைக் கேட்ட பரதன் துடிதுடித்துப் போனான். கைகேயியின் இந்த வஞ்சனைச் செயலில் தனக்கும் பங்கு உண்டென்றால் பலவிதமான பாவங்களைக் கூறி அதனைச் செய்தோர்க்குக் கிட்டும் பலன்கள் தன்னை வந்து அடைவதாக என்று சபதம் செய்கிறான். அதனைக் கேட்ட தரும தேவதையும் நடுங்கினாள்.

அறங் கெட முயன்றவன் அருள் இல் நெஞ்சினன்
பிறன்கடை நின்றவன் பிறரைச் சீறினோன்
மறங்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்
துறந்த மாதவர்க்கு அரு துயரம் சூழ்ந்துளோன்

குரவலர் குழலியை வாளிற் கொன்றுளோன்
புரவலன் தன்னொடு அமரில் புக்குடன்
விரவலர் வெரிநிடை விழிக்க மீண்டுளோன்
இரவலர் இருநிதி எரிந்து கெளவினோன்

தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன் அற நெறி அந்தணாளாரில்
பிழைத்தவன் பிழைப்பிலா மறையை பின்னி நின்று
இழைத்தவர் உளர் எனும் இழுதை நெஞ்சினோன்

தாய்பசி உழந்து உயிர் தளரத் தான் தனிப்
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அத்
தீயெரி நரகத்துக் கடிது செல்க யான்

தாளினில் அடைந்தவர் தம்மைத் தற்கொரு
கோளுற அஞ்சினன் கொடுத்த பேதையும்
நாளினு மறம் மறந்தவனும் நண்ணுறு
மீளறு நரகிடைக் கடிது வீழ்க யான்

பொய்க்கரி கூறினோன் போருக்கு அஞ்சினோன்
கைக்கோலும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்
எய்த்திடத்து இடர் செய்தோன் என்ற இன்னோர்
மெய்க்கொடு நரகிடை விரைவின் வீழ்க யான்

அந்தணர் உறையுளை அனலியூட்டினோன்
மைந்தரைக் கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன்
நிந்தனைத் தேவரை நிகழ்த்தினோன் புகும்
வெந்துயர் நரகத்து வீழ்க யானுமே

கன்று உயிரோய்ந்துகக் கறந்து பாலுண்டோன்
மன்றிடைப் பிறர் பொருண் மறைத்து வவ்வினோன்
நன்றியை மறந்திடு நயம் இல் நாவினோன்
என்றிவர் உறு நரகென்ன தாகவே

ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஏகினோன்
சோறு தன் அயல் உளோர் பசிக்கத் துய்த்துளோன்
ஏறும் அக்கதியிடை யானும் ஏறவே

எகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்
அகலில் அற நெறி அகற்றி ஒள் பொருள்
வெகிய மன்னன் வீழ் நரகில் வீழ்க யான்

அழிவரும் அரசியல் எய்தியாகும் என்று
இழிவரு சிறுதொழில் இயற்றி ஆண்டு தன்
வழிவரு தருமத்தை மறந்து மற்றொரு
பழிவரு நெறிபடர் பதகன் ஆகயான்

தஞ்சென ஒதுங்கினோர் தனது பாருளோர்
எஞ்சலின் மறுக்கினோடு இரியல் போய் உற
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக்கொள
அஞ்சின மன்னவனாக யானுமே

கன்னியை அழிசெயக் கருதினோன் குரு
பன்னியை நோக்கினோன் பருகினோன் நறை
பொன்னிகழ் களவினிற் பொருந்தினோனேன் எனும்
இன்னவர் உறுகதி என்னதாகவே

ஊண் நல உண்வழி நாயின் உண்டவன்
ஆண் அலன் பெண் அலன் ஆர் கொல் ஆம் என
நாணலன் நரகம் உண்டெனும் நல்லுரை
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆகயான்

மறு இல் தொல் குலங்களை மாசிட்டேற்றினோன்
சிறுவிலை எளியவர் உணவு சிந்தினோன்
நறியன அயலவர் நாவின் நீர் வர
உறுபதம் நுங்கிய ஒருவன் ஆகயான்

வில்லினும் வாளினும் விரிந்த ஆண் தொழில்
புல்லிடை உகுத்தனன் பொய்ம்மை யாக்கையை
சிலபகல் ஓம்புவான் செறுநீர் சீறிய
இல்லிடை இடுபதம் ஏற்க என் கையால்

ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது என்றென்று
மாற்றலன் உதவலன் வரம்பு இல் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்
கூற்றுரு நரகினோர் கூறு கொள்கயான்

பிணிக்குறு முடையுடல் பேணிப் பேணலார்த்
துணிக்குறு வயிர வாள் தடக்கைத் தூக்கிப் போய்
மணிக்குறு நகையிள மங்கை மார்கண் முன்
தணிக்குறு பகைஞரைத் தாழ்க என் தலை

கரும்பலர் செந்நெலங் கழனிக் கானநாடு
அரும்பகை கவர்ந்துண வாலி பேணினேன்
இரும்பலர் நெடுந்தளை ஈர்த்த காலொடும்
விரும்பலர் முகத்தெதிர் விழித்து நிற்கயான்

தீயன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உணரின் நன்நெறியில் நீங்கலாத்
தூயவர்க்கு இடரிழைத்து உழலும் தோமுடை
ஆயவர் வீழ்கதி அதனின் வீழ்கயான்

இவ்வாறு பரதன் கூறியதைக் கேட்டக் கோசலை, காட்டிற்குச் சென்ற இராமனே வந்து தன் முன் நிற்பதாகக் கருதி கண்ணீர் வடித்தாள். பரதன் மேல் கொண்டிருந்த சந்தேகம் நீங்கி அவனை உனக்கு நிகர் யாருமில்லை. நீ மன்னர் மன்னவன் என்று வாழ்த்தினாள்.

முன்னை நும் குல முதல் உளோர்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கு நீர்மையார்
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள்
உன்னி உன்னி நைந்து உருகி விம்முவான்

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 525

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 1045

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 674

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 587

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 529

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN